Saturday 24 January 2015


மயில்இறகு பிடுங்கி
இதமாய் வருடுகிறாயே...
அதன் காயம்
உன் காயத்துக்கு மருந்தானால்...
அதன் மேனியை யார்வருடுவார்..
போய்பார்..
அது தோகைமயில்தான்
ஆணுக்கு வலியில்லையென யார் சொன்னார்....
வழியில்லாமல்....
வெளிவருவதில்லை
மூடியே பாறையாகி
முடிவில்லா முள்ளாகி
முண்டமாய்தான் பறக்கிறது
பெண் ஆட்டிக்கு தெரியாமல்...

Sunday 4 January 2015

இழுத்து வாரி
கூட்டிக் கட்டி
தொட்டு அலங்கரித்து
சூடி அழகு பார்த்த...
கார்மேகக் கருங்குழல்
பாத்திரத்துக்குள் ஒன்று தவறிவிழுந்தால்...
அன்னத்தையே தள்ளி வைப்பது சிலபேர்
கொட்டிவிடுவது பலபேர்...
இருக்கும் இடம் தவறுவதால்...
இழிவான அருவருப்பு....


பாதாம்,பிஸ்தா,முந்திரி
சாப்பிடு
முதலிரவுக்கென்றேன்...
சீ..சீ..
அன்பு மட்டும் போதுமென்றான்

என்னைக் கையேந்தி
மார்பிலும் தோளிலும்..
தூளி கட்டி தொட்டிலாட்ட
துள்ளி நடமாட...
உதைத்து கோலிவிளையாட..
உரம் வேண்டுமல்லவா..

நான் ஐன்னித்த அந்த முதலிரவாக
போகப்போகிறேன்.. என..
புரியாத அந்த தாயுமானவன்


இதயத்தை தொட்டு..
ஈரத்தை காட்டி...
ஈயத்தை ஊற்றி..
இந்த உலகத்தைவிட்டே..போக
உன்னால் மட்டுமா முடியும்...

நானும் ..
காந்தாரி போலதான்..
மரத்துடன்..மரமாய்..

இதயம் தின்ன வருகிறது...
பின்
மறந்தே...
போகிறது...


ஈரமதியே...இளநிலவே..
இதயம் பாரேன் பரிமளமே..
உன் வாய்யுண்டே நான் இளைத்தேன்
ஓர்வாய் கொண்டே உயர்வாய்..
ஒழுகவிடு பிடித்தேனே..
பாவாய் உன்னைப் பிடிக்கிறதே..
பகல்வாய் என் பால்நிலவே..
ஊர்வாய் என்னுள் எப்போதும்..
ஒருவாய் காதல் ஊட்டிவிடேன்.

என் வலி கண்டு..
பிரசவித்தான் அன்பை
அதை அறிந்து..
எங்கோ ஒரு சிசு பிறந்தது
சுகப்பிரசவமாக...


சமாதானம்
தூய்மை
புனிதம்
அழகு...
என்உடையில்..

இது
வாள்உடையா...?
பாழ்உடையா..?

சிலர்
ஒதுங்குகிறார்..
பலர் ஒதுக்குகிறார்கள்
வேண்டியோர் நெருங்குகின்றார்..
சில மனிதம் படைத்த மனம் உடைந்து நொறுங்குகிறது

வலி
வேதனை
அவஸ்தை மறைத்து...
சீதேவி
பெண்பால் போலும்..
நிரப்பிக்கொண்டே இருப்பாள்
அவளால் ஆனவரை,முடிந்தவரை
அவளில் கட்டப்பட்ட கலத்தில்..!


நீ....
பகுபதமா..
பகாப்பதமா..
இப்பதமும் தெரியாமல்
நான்..!
சொப்பனத்தில்...


விசை நின்றது தெரியாமல்
திசைமாறிய பறவைபோல்
திகைத்து நிற்கின்றேன்
நீ என்ன திசைஅறிகருவியா...

குரும்பட்டிக் குலைபோல்
கருப்பட்டியாய் பா வடிக்க..
பார்க்காதே பார்க்காதே...என
திருகித் திருகி உண்டதிலே
என் ஜிமிக்கு முத்தை
திக்குமுக்காட வைச்ச பா கா தாச்சே..!

ஏதாவது எண்ணை பட்டால்
வெடித்துகிட்டே இருப்பேன் படபடவென
நீ என்ன எண்ணை ...?
வெடிக்காமலே தாளிக்கப்படுகிறாய்..

எதுகையாய் இருந்தால்
மோனையாய் விழுகிறாய்..
எது கை காட்டு! அந்த பாதுளை விரலுக்கு
மாதுளை வைத்து கணையாழி செய்ய..

விளம்பரம் இருந்தால்தானே விற்பனையும்..
கற்பனை சுயம்வரமும் சுரந்தடையும்
விழும் பாரம் உனக்கு தெரியவில்லையா...

கள்பனைபோல் கிடக்கும்
இந்த விளா மரத்தின்...வில்வ பழத்தின்
சுவையறியாமல்..
விட்டத்தை ஏன் இன்னும் தொட்டே நிற்கிறாய்..

எங்கே அன்புகுறியென வழிதேடி
சொல்வனத்தில் தொலைந்து போகிறேன்
குத்தி இழுக்கிறதே கொண்டை ஊசிபோல் கெண்டையை
என்னைக்கடைய எந்த கடை ய நல்லூரில் வாங்கிவந்தாய்
அந்த குத்தூசி இதயத்தை..!
என் இதயம் குடைசாய்தே கிடக்கிறது.


படைத்துவிட்டு படியளக்காமல்
இருந்தால்..எப்படி...ஜீவன் துடிக்காதா..
திங்களில் காலடி வைத்து
செவ்வாயில் குடியமர...
எனக்கு ஆசையில்லையா...
நான்
படியேறி வரட்டுமா..
அதுவும் மடியேந்தி
கொஞ்சம் அள்ளிப்போடேன்
அதில் பஞ்சமில்லாமல் தஞ்சமென..
அந்த இதயம் வந்து விழட்டும் இந்த மடியில்...

Thursday 1 January 2015

ஒன்று வாங்கினால்..
ஒன்று இனாமாம்..
அந்த அங்காடித் தெருவில்
அழகாய் தொங்கியது அச்செழுத்தில்..

உள்வைத்துப் போனேன் அடியை..

மல்லுவேட்டி
மடித்த சேட்டு
வாரியதலை
கூரிய பேச்சு
குனிந்த அநாகரீகம்
கூடிருக்கும் நாகரீகம்
வாட்டமில்லா வாசம்
வாட்டசாட்டமாய் மனிதம்
அன்பென்று ஒன்றைக் கொடுத்தான்
இதயமென்ற ஒன்றை கொடுக்க மறந்துவிட்டானா.....

குறிப்பிட்ட சில..
நேரங்களுக்கு மட்டுமே
பொழிந்துவிடுகிறது
குடைவிரிந்து..
களித்து..
நனைந்து..
பின்
மடங்கிப் போகிறது
அந்தக் கைபிடியுடனேயே...


மாங்கனி பக்கமிருக்க
மயவன் சொர்கமென..
பரந்த மார்பிலே..
படர்ந்த கொடியும்..
விரிந்த பந்தத்துடன்..
பய பக்தியும் சேர்ந்து
திரிந்து எரிந்த சுடர்நாளே..!
அன்றுனக்கு சிவராத்திரி
இன்றும் அதே....
இர வாய் ..முதல்....
மத்தாப்பு சொரியட்டும்..
மரிக்கொழுந்து வாசலிலே...


பாலும் தெளிதேனும் பாக்கும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு “நாம்” தருவோம் – கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே “நீயெமக்கு”
சங்கத் தமிழ் மூன்றும் தா.

அன்பைக் கொண்டு..
ஆக்கிரகத்தைக் கொன்றழி!
இன்னலைக் கண்டு..
ஈரப்பசை கொண்டு மெழுகிவிடு!
உகப்புக் கொண்டு..
ஊத்தைபோக்கி உலரவிடு!
எரிகதிர்போல் எழுச்சி பூண்டு..
ஏழ்மையைக் கொல்!
ஐயுணர்வை ஐக்கியமாய்க் கொண்டு
ஆக்கிப் படைத்துவிடு!
ஒட்பம் உடுத்தி..
ஓதிநட ஓர் எடுத்துக்காட்டாய்!
ஔவித்தல் கூடாதென..
ஔவையை வழிகாட்டு!
இஃதே..யாம் இணைந்தால் இன்புறலாம்..
கழிந்துபோன காலத்தைவிடுத்து..
கனிந்திருக்கும் இந்தாண்டுலே
காலடிபதித்துக் கொய்து..
காப்பாற்றிருப்போமே இவைகளை!!

{ஆக்கிரகம்-கடும்சினம்}{உகப்பு-மகிழ்ச்சி}{ஊத்தை-அழுக்கு}{எரிகதிர்-சூரியன்}{ஒட்பம்-அறிவு,அழகு}{ஔவித்தல்-பொறாமைப்படுதல்}

உறவியல்..உணர்வியல்..அறிவியல்..அன்பியல் கொண்ட அனைத்து உறவுகளையும் ..அணைத்து....
இந்த அழகியல்.. ஆனந்தத்துடன் அள்ளிக் கொடுக்கும் புதுவருட வாழ்த்துகள்
{நான் அ{ச}மைத்த அழகு மேடை..இனிப்பாலே....}